நள்ளிவு கடந்து கொஞ்ச நேரம்தான் ஆகியிருந்தது. போலீஸ் வாகனங்கள் சரசரவென கோபாலபுரத்துக்குள் நுழைந்தன. ஒரு தீவிரவாதியை பிடிக்கப் போவதுபோல் கோபாலபுரம் பகுதியையே `சீல்’ பண்ணி விட்டு, கலைஞர் வீட்டுக்குள் தடதடவென நுழைந்தன பூட்ஸ் கால்கள். வீட்டிலிருந்தவர்கள் மிரண்டு போகிறார்கள். போலீசாரின் கண்கள், கலைஞர் எங்கே என ஊடுருவிப்பார்த்தன. அவர் அங்கு இல்லை என்பதை அறிந்த அடுத்த நிமிடமே, காவல்துறை வாகனங்கள், ஆலிவர் ரோடு இல்லம் நோக்கி சீறின.
இரவு 2.20 மணி.
ஏழு வாகனங்கள் வரிசையாக வந்து நிற்பதையும் அதிலிருந்து போலீஸ்காரர்கள் படபடவென இறங்குவதையும் பார்த்த கலைஞரின் கார் டிரைவர், ``என்ன?’’ என்று கேட்ட மாத்திரத்தில் அவரை அடித்து கீழே தள்ளிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தது போலீஸ். போனதும் அவர்கள் செய்த முதல் வேலை, கீழ்த்தளத்தில் இருந்த டெலிபோனை அடித்து நொறுக்கியதுதான்.
அடுத்து முதல் மாடிக்கு சென்ற போலீஸ் படை, பூட்டியிருந்த கதவை உடைத்துத் தள்ளி உள்ளே நுழைந்தது. மாடியிலிருந்த பெட்ரூம் கதவைத் திறந்து, 12 போலீசார் திமுதிமுவென நுழைந்தனர். தூக்கத்திலிருந்த கலைஞர், பதற்றத்துடன் விழித்தார். அவரைச் சுற்றிலும் காக்கிச் சட்டைகள். கலைஞர் சாதாரண கைலி அணிந்திருந்தார். அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாள் இரவு நேர ஆடை உடுத்தியிருந்தார். படுக்கை அறை வரை ஊடுருவியிருக்கும் போலீசாரைக் கண்டதும், ``என்ன... என்ன...?’’ எனக் கொஞ்சம் பதற்றம் கலந்த குரலில் கலைஞர் கேட்டார்.
``உங்களைக் கைது செய்கிறோம்!’’
``வாரண்ட் இருக்கிறதா?’’
``அதெல்லாம் இல்லை... எழுந்திருங்க’’ என்று போலீஸ் அதிகாரி சொன்னதும் கலைஞர் முகத்தில் அதிர்ச்சி. உடனடியாகப் போனை எடுத்தார். அது `சாகடிக்கப்பட்டிருந்தது.’ உடனே செல்போனை எடுத்த கலைஞர், போலீசாரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு முரசொலி மாறனைத் தொடர்புகொண்டார். தன்னைக் கைது செய்ய போலீஸ் வந்திருப்பது பற்றித் தெரிவித்தார். உடனடியாக புறப்படுமாறு போலீசார் பரபரத்தனர். கைலியை மாற்றிக்கொண்டு வேட்டி அணிந்து வருகிறேன் என்றார் கலைஞர். `கூடாது’ என்றார் போலீஸ் அதிகாரி. செருப்பு அணிந்து கொள்கிறேன் என்றார் கலைஞர். அதற்கும், `கூடாது’ என்ற பதில்தான் வந்தது. `பாத்ரூமிற்காவது போயிட்டு வரலாமா?’’ என்றார் கலைஞர். அதுவும் கூடாது என்று போலீசார் சொன்னதுதான் கெடுபிடியின் உச்சம். ``அங்கிருந்து நான் என்ன தப்பித்தா போய்விடுவேன்?’’ என்று கலைஞர் கேட்டார். ``கிளம்புங்க’’ என்று போலீசார் மீண்டும் அவரசப்படுத்தினர்.
அப்போது ஆலிவர் ரோடு இல்லத்திற்கு மாறன் வந்தார் ``கைது செய்வதாக சொல்கிறீர்களே? வாரண்ட் இருக்கிறதா?’’ என்று அவரும் கேட்டார். அப்போதும் போலீஸ் அதிகாரிகள், கலைஞரை கிளம்பச் சொல்லி வலுக்கட்டாயப்படுத்தினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ``ஏன்யா இப்படி தள்ளுறீங்க?’’ என கேட்டபடி, போலீஸ் அதிகாரிகளை முரசொலி மாறன் விலக்கியும் தள்ளியும் விட, ``அரெஸ்ட் ஹிம்’’ என்ற உத்தர ஓங்கி ஒலித்தது. அதை தொடர்ந்து, கலைஞரின் வயதைக் கூட பொருட்படுத்தாமல் அவரைப் பிடித்தும் இழுத்தும் அலேக்காகத் தூக்கி கைது நடவடிக்கையை மேற்கொண்டது காவல் துறை. கலைஞர் மீது போலீசின் கரம் பட்டதும் குடும்பத்தினர் பதறிப்போய் கதறி அழுதனர். அழுகுரல்களுக்கிடையே கலைஞரை கைது செய்து வாகனத்தில் ஏற்றியது போலீஸ்.
இரவு 3.15 மணி.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள சி.பி.சி.ஜ.டி. அலுவலகத்திற்கு கலைஞரைக் கொண்டு வந்தனர். அங்கே ஒரு தனி அறையில் அவரை உட்கார வைத்தனர். கலைஞரை படம் எடுக்கவும் அவரது கருத்தைக் கேட்கவும் அரசினர் தோட்ட வளாகத்தில் திரண்டிருந்த பத்திரிகையாளர்களை போலீசார் விரட்டியடித்தனர். ரக் கைதும் செய்தனர். அப்போது, கலைஞரைப் பார்ப்பதற்காக மத்திய அமைச்சர்கள் மாறன், டி.ஆர். பாலு ஆகியோர் காரில் வந்தனர். அவர்களது காரை தடுப்புக் கம்பிகள் போட்டு மறித்தனர். காரிலிருந்து இறங்கிய டி.ஆர். பாலு, போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈ.டுபட்டார். ``நான் மத்திய அமைச்சர். உள்ளே செல்ல என்னை அனுமதித்தாக வேண்டும். இது என்ன எமெர்ஜென்சி காலம் என்றா நினைத்துக் கொண்டீர்கள்?’’ என சத்தம் போட்டார் பாலு. அவரையும் போலீசார் கீழே தள்ளினர். `இனி பொறுப்பதில்லை’ என்பது போல் மத்திய அமைச்சர் மாறனின் கார், தடுப்புக் கம்பிகளை உடைத்து நொறுக்கிவிட்டு முன்னேறியது.
சி.பி.சி.ஜ.டி அலுவலகத்தில் சுமார் 1 மணிநேரம் கலைஞர் வைக்கப்பட்டிருந்தார். 4.10 மணியளவில் கெடுபிடியைக் கொஞ்சம் தளர்த்திய போலீசார், பத்திரிகையாளர்கள் உள்ளே செல்ல அனுமதித்தனர். ஆனால், பத்திரிகையாளர்கள் உள்ளே நுழைந்தபோது, போலீஸ் வாகனங்கள் மூன்று சீறிப் பறந்தன. அதில்தான் கலைஞர் அழைத்துச் செல்லப்படுகிறார் என்பதை அறிந்து கொண்ட பத்திரிகையாளர்கள் பின்தொடர்ந்தனர். ஒரு காரில் கலைஞர் ஏற்றப்பட்டிருந்தார். அவருக்கு பக்கத்தில் மாறனும் பரிதி இளம்வழுதியும் உட்கார்ந்திருந்தனர். மத்திய சென்னை ஜாயிண்ட் கமிஷனர் ஜார்ஜ் தலைமையில், எஸ்.பி.க்கள் கிறிஸ்டோபர் நெல்சன், சாரங்கன் ஆகியோர் அடங்கிய வாகன அணிவரிசை தொடர்ந்து அந்த வாகனங்களைப் பின்தொடர்ந்து, ஒரு டாடா சஃபாரியில் கலைஞர் குடும்பத்தினர் சென்றனர். தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள், மு.க. தமிழரசு, கனிமொழி, செல்வி, மாறனின் மனைவி, மகள் ஆகியோர் அந்த சியாராவில் இருந்தனர். இருளின் அமைதியை கிழித்துக்கொண்டு போலீஸ் வாகனங்கள் பறந்தன.
கீழ்பாக்கம் டவர் பிளாக் குடியிருப்பில் உள்ள நீதிபதி அசோக்குமார் வீட்டில்தான் கலைஞர் ஆஜர்படுத்தப்படவிருக்கிறார் எனத் தெரிந்ததால் பத்திரிகையாளர்கள் அந்தக் குடியிருப்பின் முன் திரண்டிருந்தனர். அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸ் படை பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தது. சாலையில் பத்திரிகையாளர்கள் காத்திருந்த நிலையில், கலைஞரை ஏற்றி வந்த காரும் அதைத் தொடர்ந்து வந்த வாகனங்களும் நீதிபதி வீட்டுக்கு செல்லாமல் கெல்லீஸ் நோக்கி சென்றது. போலீசாரின் திசைதிருப்பும் நடவடிக்கையை அறிந்த பத்திரிகையாளர்கள் உடனடியாக அதனைப் பின் தொடர்ந்தனர்.
வேப்பேரி காவல்நிலையத்திற்குத்தான் கலைஞரைக் கொண்டு செல்கிறார்கள் என்று கணித்த பத்திரிகையாளர்களின் வாகனங்களும் சீறின. வேப்பேரி காவல்நிலையத்திற்கு செல்லவேண்டுமென்றால் அங்குள்ள பாலத்தின் கீழ்ப் பகுதி வழியாகத்தான் செல்லவேண்டும். ஆனால் போலீஸ் வாகனங்கள், பத்திரிகையாளர்களைத் தவிர்ப்பதற்காக பாலத்தின் மேலே ஏறி ராங் ரூட்டில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றது.
கலைஞரை அழைத்து வந்த காரின் கதவு திறக்கப்பட்டது. முதலில் பார்வைக்குத் தென்பட்டவர் மாறன்தான். அவரது மூக்குக் கண்ணாடி உடைந்திருந்தது. வேட்டி பாதிக்குமேல் கிழிந்து போயிருந்தது. பக்கத்தில் கலைஞர் உட்கார்ந்திருந்தார். அவரையடுத்து பரிதி உட்கார்ந்திருந்தார். அப்போது, கலைஞர் குடும்பத்தினரின் கார், ஸ்டேஷனுக்குள் வந்தது. ``மாஜிஸ்திரேட் வீட்டுக்கு அழைத்துப் போவதா சொல்லிட்டு ஏன் இங்கே அழைச்சிட்டு வந்தீங்க?’’ எனக் கலைஞர் குடும்பத்து பெண்கள் போலீசிடனம் கேட்டனர். கனிமொழி இது பற்றி போலீசாரிடம் வாதிட, ``விமன் போலீஸ்....’’ எனக் குரல் கொடுத்த ஜாயிண்ட் கமிஷனர் ஜார்ஜ், ``அரெஸ்ட் தெம்...’’ என உத்தரவிட்டார். உடனே பெண் காவலர்கள் கனிமொழியை நெருங்க, அவரது கணவர் அரவிந்தன் குறுக்கிட்டு, `ஏன் கைது செய்கிறீர்கள்?’’ என்றார். போலீசார் தயங்கி நின்றனர்.
அப்போது எஸ்.பி. கிறிஸ்டோபர் நெல்சன், முரசொலி மாறனிடம் சென்று ``உங்களையும் கைது செய்கிறோம். அரெஸ்ட் ஆயிடுங்க’’ என்றதும் ``வாரண்ட் இருக்கா?’’ எனக் கேட்ட மாறன், ``மத்திய அமைச்சர் எனத் தெரிந்திருந்தும் எதற்கு என்னை தாக்கினீர்கள்?’’ என்றபடி, கிழிந்து தொங்கிய தன் சட்டைப் பாக்கெட்டிலிருந்து ஒரு லிஸ்டை எடுத்தார். ஆபத்தான கட்டத்திற்கு ஆளானால் தனக்கு என்னென்ன ட்ரீட்மெண்ட் தரப்படவேண்டும் என்பதை விளக்கும் சீட்டு அது: அப்பல்லோ மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்தது முதல் அந்த லிஸ்டை பாக்கெட்டிலேயே வைத்திருக்க வேண்டும் என்பது டாக்டர்களின் அட்வைஸ்.
எஸ்.பி.யோ அந்த லிஸ்டை பார்க்கக்கூட ஆர்வம் காட்டாமல், மாறனைத் தூக்கிச் செல்ல உத்தரவிட்டார். காரிலிருந்து மாறனை பிடித்து இழுத்த போலீசார் அவரைக் குண்டுகட்டாக உயரத தூக்கி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பதறிப்போன பரிதி, போலீசாருடன் மல்லுக்கட்டியபடி மாறனுடன் சென்றார். மாறன் ஏறத்தாழ மயக்க நிலைக்குச் சென்றுவிட `அய்யோ.. அம்மா...’ என்று அவரது குடும்பத்தினரின் அழுகுரல்கள் காவல்நிலையம் முழுக்க எதிரொலித்தது. மாறனை ஒரு பெஞ்ச்சில் படுக்கவைத்து ஆசுவாசப்படுத்தினார் பரிதி. மாறனையும் கலைஞர் குடும்பத்தினரையும் கலைஞருடன் வராதபடி பிரிக்க வேண்டும் என்பதுதான் போலீசின் திட்டம். அது நடந்துவிட்டதால் கலைஞரை மாஜிஸ்திரேட்டின் வீட்டிற்கு கொண்டு சென்றனர். போகும்போது, கலைஞர் குடும்பத்தினர் வந்த காரின் சாவியை பூட்டி எடுத்துச் சென்றுவிட்டது போலீஸ்.
அதிகாலை 5.10 மணி.
டவர் பிளாக்கில் உள்ள மாஜிஸ்திரேட் அசோக்குமாரின் வீட்டிற்கு கலைஞர் அழைத்துச் செல்லப்பட்டார். முதல் தளத்தில் மாஜிஸ்திரேட்டின் வீடு இருந்ததால் லிஃப்ட் பயன்படுத்தப்பட்டது. வீட்டில் தயாராக இருந்தார் அசோக்குமார். அவருடன் முன்னாள் அட்வகேட் ஜெனரல் வெங்கடபதி, முன்னாள் அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம், சி.பி.சி.ஜ.டி. அதிகாரி ஆகியோர் காத்திருந்தனர். அவர்களுடன் அங்கு இருந்த மற்றொரு பிரமுகர், கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டிருந்த முன்னாள் தலைமைச் செயலாளர் கே.ஏ. நம்பியார். மாஜிஸ்திரேட் வீட்டுக்குள் கலைஞர் வந்ததும் முன்னாள் அட்வகேட் ஜெனரல் எழுந்து இடம் தந்தார். இருக்கையில் உட்கார்ந்த கலைஞர், நம்பியாரைப் பார்த்து கொஞ்சம் அசந்து போனார். ``உங்களை எப்போது அரெஸ்ட் செய்தார்கள்?’’ என்று கலைஞர் கேட்க, ``2 மணிக்கு’’ என பதில் வந்தது நம்பியாரிடமிருந்து.
``சென்னை நகருக்கு பாலங்கள் கட்டியதில் 12 கோடி ஊழல் செய்தது தொடர்பாக இவர்களைக் கைது செய்தோம்’’ என மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்த சி.பி.சி.ஜ.டி. அதிகாரி, அதற்கான முதல் தகவல் அறிக்கையையும் ரிமாண்ட் ரிப்போர்டையும் கொடுத்தார். ``டாக்குமெண்ட் எவிடென்ஸ் இருக்கா?’’ என மாஜிஸ்திரேட் கேட்க, ``இருக்கு... அதை இங்கே எடுத்து வரக்கூடிய அளவில் இல்லை. பெரிய பெரிய கட்டுகளாக இருக்கின்றன’’ என்றார்.
``எஃப்.ஜ.ஆர். எப்ப போட்டீங்க?’’ என மறுபடி கேள்வி எழுப்பினார் மாஜிஸ்திரேட் அசோக்குமார் ``மாநகராட்சி கமிஷனர் ஆச்சார்யலு நேற்றுதான் (ஜூன். 29) புகார் கொடுத்தார். அதன்பின்தான் எஃப்.ஜ.ஆர். போட்டோம்’’ இது அதிகாரி. கேள்விகள் தொடர்ந்தன.
``12 கோடிக்கு ஊழலா? எந்த அளவுக்கு புலனாய்வு செய்துள்ளீர்கள்?’’
``ஒவ்வொரு பொருள் வாங்கும்போதும் ஒவ்வொரு கட்டத்திலும் விலையை ஏற்றி ஊழல் செய்யப்பட்டுள்ளது.’’
``வேறு யார், யார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது?’’
``ஏ-1 மு.க. ஸ்டாலின், அதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி, கோ.சி. மணி, நம்பியார், பொன்முடி, ஏ.கே. ஜெகதீசன், ராஜாசங்கர், ஆர்.எஸ். ஸ்ரீதர்’’ - என்று பட்டியலை சொன்னார் அதிகாரி.
அதன்பின், நம்பியார் பக்கம் திரும்பிய மாஜிஸ்திரேட், ``உங்களை அரெஸ்ட் செய்யும்போது முறையாக நடந்து கொண்டார்களா? உங்கள் மீதான குற்றச்சாட்டு பற்றி என்ன சொல்கிறீர்கள்?’’ எனக் கேட்டார். ``பாலம் கட்டுவது என்பது தலைமைச் செயலாளரின் கீழ் வராது. அது சம்பந்தமான ஃபைலை நான் பார்க்கவில்லை. இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. 5 பக்கங்களில் கடைசி 2 பாராவில் மட்டும்தான் என் பெயர் எழுதப்பட்டுள்ளது என் பெட்ரூமுக்கு வந்து அரெஸ்ட் செய்தார்கள். நான் மத்திய அரசுப் பணியில் பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றியவன். தப்பித்து ஒடக்கூடியவனல்ல. நான் சமீபத்தில் முதுகுப் பகுதியில் ஆபரேஷன் செய்துகொண்டேன். என்னை சிறைக்கு அனுப்பினால் சிகிச்சையளிக்க ஒரு நர்ஸ் தேவை’’ என்றார் நம்பியார்.
மாஜிஸ்திரேட்டின் கண்கள் கலைஞர் பக்கம் திரும்பின. தன்னை போலீசார் கைது செய்த விதம் குறித்து விளக்கத் தொடங்கினார் கலைஞர். ``நான் எழுத்து வேலைகளை முடித்துவிட்டு, புத்தகங்கள் படித்துவிட்டு இரவு 12 மணிக்கு உறங்கப்போனேன். ஆழ்ந்த உறக்கம். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. நானும் என் மனைவியும் அறையில் இருந்தோம். அந்த இடத்திற்கு வந்த போலீசார் என்னை குண்டு கட்டாகத் தூக்கி இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள். செருப்பு அணிந்து கொள்ளவோ வேட்டி மாற்றிக்கொள்ளவோ கூட போலீசார் என்னை அனுமதிக்கவில்லை.’’ என்று கலைஞர் சொன்னபோது, அவரது சட்டை கிழிக்கப்பட்டிருப்பதை மாஜிஸ்திரேட் பார்த்தார்.
கலைஞரின் வழக்கறிஞர்கள் ராஜாவும், சண்முகசுந்தரமும் நீதிபதியிடம் சில விளக்கங்களை அளித்தனர். ``புலனாய்வே தொடங்கப்படாத ஒரு வழக்கிற்காக நள்ளிரவில் கைது செய்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவரது வயதையும் உடல்நிலையையும் கருத உடனடியாக அவரை பெயிலில் விடவேண்டும்’’ என்றனர். இதற்கு முன்னுதாரணமாக உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒன்றையும் காட்டினார் சண்முகசுந்தரம். மாஜிஸ்திரேட்டிடம் கலைஞர் விளக்கிக் கொண்டிருந்தபோது, வேப்பேரி காவல் நிலையத்திலிருந்து ஒரு வாடகை ஆட்டோவில் ஏறி, டவர் பிளாக்கிற்கு வந்தார் மாறன். அவரது உடல் ரொம்பவும் தளர்ந்திருந்தது. மாஜிஸ்திரேட் வீட்டிற்குள் மாறனும் கலைஞர் குடும்பத்தினரும் அனுமதிக்கப்பட்டனர்.
சுமார் இரண்டு மணி நேர இடைவெளிக்குப்பின் குடும்பத்தினரைப் பார்த்த கலைஞர் நெகிழ்ந்து போனார். ``என்னை 2 நாள் ஜெயிலில் வைக்கணும்ங்கிறதுக்காகத் தானே சனிக்கிழமையில் கைது பண்ணியிருக்காங்க. என்ன பெரிய ஜெயில்? அந்த சசிகலாவே சர்வசாதாரணமா இருந்துட்டு வருது’’ என்று அந்த சூழ்நிலையிலும் குடும்பத்தினருக்கு ஆறுதலான வார்த்தைகளைச் சொன்னார். மாஜிஸ்திரேட்டிடம் மாறன், ``பெரியார், அண்ணா போன்ற பெரிய தலைவர்களெல்லாம் கைது செய்யப்பட்டு மாஜிஸ்திரேட் முன் நிறுத்தப்பட்டு, அங்கேயே பெயில் பெற்ற வரலாறு உண்டு’’ என்று தெரிவித்ததுடன், தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றியும் விளக்கினார். அத்துடன், இதை நீங்கள் அவசியம் குறித்துக் கொள்ள வேண்டும் என்று சொன்ன மாறன், ``டீநே யீடிடiஉந டிககiஉநச. ஆச. ழுநடிசபந. அவர் பெயரை நீங்க ரிமாண்ட் ரிப்போர்ட்டில் நோட் பண்ணனும். லடிர யசசநளவ வாயவ டெடினனல கநடடடிற என்று என்னைப் பார்த்துச் சொன்னார். நான் இதை நாடாளுமன்றத்தில் உரிமை பிரச்சினையாக கொண்டு வருவேன்’’ என்றார். மாஜிஸ்திரேட்டும் குறித்துக்கொண்டார்.
அதன்பின், ``இது ஹாலிடே கோர்ட். இங்கே பெயில் தரமுடியாது. ரெகுலர் கோர்ட்டில் தான் பெயில் தரமுடியும்’’ என்றார். அப்போது, கலைஞர் தன் உடல்நலம் குறித்து விளக்கினார். ``சமீபகாலமாக சட்டமன்றத்திலும் பொது இடங்களிலும் நான் உட்கார்ந்துதான் பேசுகிறேன். ஒரு நிமிடத்திற்கு மேல் என்னால் நிற்க முடியாது’’ என்றார். அவரை சிறைக்கு அனுப்புவதாக இருந்தால் உரிய மருத்துவர்கள் வேண்டும் என்று வலியுறுத்தினார் டாக்டராக உள்ள மாறனின் மகள். முரசொலி மாறன், ``சசிகலாவே மாஜிஸ்திரேட் வீட்டிலிருந்து நேராக அப்பல்லோவுக்குப் போகுது. கலைஞருக்கும் அதுபோல் சிகிச்சைக்கு ஏற்பாடு பண்ணுங்க,’’ என்றார்.
``என்னை ரெகுலராக செக் செய்யும் டாக்டர் கோபாலையே அனுப்புங்க’’ என்றார் கலைஞர். ``அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். டாக்டர் கோபாலே அங்கு வந்து சிகிச்சை தரட்டும்’’ என்றார் மாஜிஸ்திரேட் அசோக்குமார். கலைஞர் இதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால், மாறனின் மகள், ``பொது மருத்துவமனையில் தண்ணீர் வசதியே இல்லை. அங்கு எப்படி சிகிச்சை அளிக்க முடியும்?’’ எனக் கேட்டார். ``அரசு மருத்துவமனைக்கு கலைஞரைக் கொண்டு போனால் அவரைக் கொன்னு போட்டுடுவாங்க’’ என் பதற்றத்துடன் தெரிவித்தனர் குடும்பத்தினர்.
அதன்பின் பேசிய மாஜிஸ்திரேட் அசோக்குமார், கலைஞரிடம், ``நீங்கள் முன்னாள் முதல்வர், தற்போதைய எம்.எல்.ஏ., என்ற அடிப்படையில் உங்களுக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க உத்தரவிடுகிறேன்’’ என்றார். மருத்துவமனைக்கு அனுப்பப்படலாம் அல்லது பெயிக கிடைக்கும் என சிறிது நம்பிக்கை மட்டுமே கொண்டிருந்த கலைஞருக்கு, மாஜிஸ்திரேட்டின் இந்த முடிவு பெரிய அதிர்வை ஏற்படுத்தவில்லை. ``பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடல்நிலையை பரிசோதித்து, டாக்டர்கள் சம்மதித்த பின்னரே சிறைக்கு கொண்டு செல்லவேண்டும். இவரைக் கைது செய்யும்போது போலீசார் நடந்து கொண்ட முறை கடுமையாக இருந்திருக்கிறது. இனி எக்காரணம் கொண்டும் இவர்மீது கை வைக்கக்கூடாது’’ என ரிமாண்ட் மெமோவில் மாஜிஸ்திரேட் குறிப்பிட்டார். ஜூலை 10ம் தேதி வரை ரிமாண்ட் செய்வதாக உத்தரவிட்டார். ``நான் இதுதான் செய்யமுடியும். இதற்கு மேல் ஏதாவது செய்தால் அதற்கு ஆயிரம் உள்நோக்கங்கள் கற்பிப்பார்கள்’’ என்று கலைஞரிடம் தனிப்பட்ட முறையில் மாஜிஸ்திரேட் தெரிவித்தார். அங்கிருந்து புறப்படும்போது நம்பியாரைப் பார்த்த கலைஞர், `நீங்க ரிடையரானதிலிருந்து என்னை பார்க்கவே இல்லை. இப்ப பார்க்க வச்சிட்டாங்க பார்த்தீங்களா’ என்று சொல்ல, ``சி.எம்.முக்கு நிறைய வேலை இருக்கும்னுதான் நான் வரலை. தப்பா நினைக்க வேணாம்.’’ என்று நம்பியார் தெரிவித்தார். ``நான் காரணமாகத்தான் சொன்னேன்’’ என்றார் கலைஞர். நம்பியார் தலைமைச் செயலாளராக இருந்தபோதுதான் ஜெ. மீது வழக்குகள் போடப்பட்டன. இதனால்தான் பழிக்கு பழி வாங்கும் லிஸ்டில் நம்பியாரும் சேர்க்கப்பட்டார்.
சிறைக்குச் செல்வதற்கு கலைஞர் தயாரான நிலையில், நமது இணையாசிரியரிடம், ``எங்க ஆட்சியின்போது போலீஸ் அதிகாரிகள் பற்றி நீங்க மோசமா எழுதும்போது, ஏன் இப்படி தப்பா எழுதுறீங்கன்னு கேட்டேன். இப்பதான் போலீஸ் அதிகாரிகள் எப்படிப்பட்டவங்கன்னு புரியுது!’’ என்று கண்கலங்கச் சொன்னார். ``நேர்மைக்கு இதுதான் பரிசு’’ என்று வருத்தம் தொணிக்கும் குரலில் சொன்னார் நம்பியார்.
காலை 6.20 மணி.
கலைஞரை ஒரு காரில் அழைத்துச் சென்றனர் போலீசார். அவருடன் டாக்டர் கோபாலும் மகள் கனிமொழியும் சென்றனர். பொது மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, மருத்துவரின் ஆலோசனைப்படியே கலைஞரை சிறைக்கு கொண்டு செல்லவேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்ததால், கலைஞரை எதிர்பார்த்து மருத்துவமனை வளாகத்ததில் பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர். ஆனால், போலீசார் நேராக சென்னை மத்திய சிறைச்சாலைக்கு கலைஞரின் காரை கொண்டு சென்றனர்.
நீதிபதியின் உத்தரவை மதிக்காத போலீசாரின் போக்கைக் கண்டித்து சிறைச்சாலை வாசலிலேயே தரையில் அமர்ந்து தனது எதிர்ப்பை தெரிவித்தார் கலைஞர். சிறைச்சாலையை ஒட்டியுள்ள பாலத்திலிருந்து இதனைப் பார்த்த கட்சிக்காரர்களும் பொதுமக்களும், `அடப்பாவிகளா?’ என குரல் எழுப்பியது நெஞ்சை குலுக்கியது. அமைதியாக அரைமணிநேரம் தன் எதிர்ப்பை வெளிப்படுத்திய கலைஞர், காலை 7 மணியளவில் சிறைச்சாலைக்குள் நுழைந்தார். அடக்குமுறைகளைத் தாங்கிய ஒரு கிழட்டுச் சிங்கம் கம்பீரமாக கூண்டுக்குள் நுழைவது போல் இருந்தது அந்த காட்சி.
நன்றி : நக்கீரன்
ஜுன் 30, 2001
